மும்பை: முறைப்படி பதிவு செய்யாததால், கலப்பு திருமணத்தை கண்டறிய அமைச்சர் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மங்கல் பிரபாத் லோதா தலைமையில், கலப்பு திருமணம் – குடும்ப ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மாநிலம் முழுவதும் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் விபரங்களை சேகரிப்பார்கள். இந்த குழுவில் அமைச்சர் உட்பட 13 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ‘ஹெல்ப்லைன்’ எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நோக்கமானது, கலப்பு திருமணம் செய்து கொள்வோர் முறைப்படி பதிவு செய்யவதில்லை. அவர்கள் மத வழிபாட்டு தலங்களிலும், பிற இடங்களிலும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே அவர்களின் விபரங்கள் இனிமேல் சேகரிக்கப்படும். தேவைப்பட்டால், ஆலோசனை மையங்களும் தொடங்கப்படும்’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.