விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் பல சிக்கல்களை தாண்டி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘வாரிசு‘ படம் வெளியாகும் சமயத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படமும் வெளியாகி பாக்ஸ் ஆஃபிசில் மிகப்பெரிய மோதலை ஏற்படுத்த போகிறது. விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும், அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கும் சரிசமமான அளவிலேயே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயம் கடும் விமர்சனங்களை சந்தித்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் அஜித் ரசிகர்களை காட்டிலும் விஜய் ரசிகர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனால் உதயநிதியிடம் கேட்டு ‘வாரிசு’ படத்திற்கு அதிகளவிலான திரையரங்குகளை ஒதுக்குமாறு கேட்கபோவதாக தெரிவித்து இருந்தார். ஒரு நடிகரை உயர்த்தியும், மற்றொரு நடிகரை தாழ்த்தியும் தயாரிப்பாளர் தில் ராஜு இப்படியொரு தவறான கருத்தை கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை அனல் பறந்து வருகிறது.
இந்த சர்ச்சையான பேச்சின் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜூவை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தும், திட்டி தீர்த்தும் வருகின்றனர். ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் சரியான அளவில் திரையரங்குகளை பங்கிட்டு உள்ளது. இரண்டு நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே சரியான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.