புதுடெல்லி: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
அதில், “ஆதரவற்றவர்களுக்காக கட்டப்பட்டுள்ள அரசு இல்லங்களில் 1.25 லட்சம் பேர் தங்கலாம். ஆனால், அவற்றில் சுமார் 60 ஆயிரம் பேர் (50%) மட்டுமே தங்கி உள்ளனர். மேலும் 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கை 9 லட்சமாக இருந்தது. வீடு இல்லாமல் சாலையோரம் தங்கி இருப்பவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தருமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது, “வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.