ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாப் தொடர்ந்த ஜாமீன் மனு நாளை விசாரணை

புதுடெல்லி: ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஃப்தாப் பூனவாலா, ஜாமீன் கோரி டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

கொலை வழக்கின் பின்னணி: மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஷ்ரத்தா வாக்கரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தாப் பூனவாலாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் புதுடெல்லிக்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் இவர்கள் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது. கடந்த மே 18ம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையை அடுத்து, அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி உள்ளார்.

ஷ்ரத்தாவிடம் இருந்து வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புகள் நின்றுபோனதை அடுத்து, அவரது தோழி ஒருவர் ஷ்ரத்தாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெல்லி சென்ற ஷ்ரத்தாவின் குடும்பத்தினருக்கு ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டெல்லி போலீசாரால் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மகாராஷ்ட்டிர போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர். காவல்துறை விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்ததை அஃப்தாப் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், மெஹ்ரோலி மற்றும் குர்கான் வனப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஷ்ரத்தாவுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்தப்பட்டது. அவை ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போனதை அடுத்து அது உறுதிப்படுத்தப்பட்டது.

மும்பை காவல் ஆணையருடன் சந்திப்பு: இந்நிலையில், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர், மும்பை காவல் ஆணையர் மதுகர் பாண்டேவை இன்று சந்தித்தார். அப்போது, 2020ல் தனது மகள் கொடுத்த புகார் குறித்த விவரங்களை அவர் கோரினார். அதில் இருக்கும் விவரங்கள், இந்த வழக்கில் தனக்கு உதவியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், அஃப்தாப் குடும்பத்தினருக்கு எதிராக தான் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்த விகாஸ் வாக்கர், அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் ஆனால் இதுவரை அவர்கள் எதையும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

ஜாமீன் கோரி மனு: ஷ்ரத்தாவை கொலை செய்து பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியதாக அஃப்தாப் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 9ம் தேதி அவர் விசாரணை நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி அஃப்தாப் பூனவாலா, டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.