13 கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது.. கோட்டைக்கு முதலமைச்சராக எடப்பாடி நிச்சயம் வருவார் – அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வெள்ளி விழா சிறப்பு மாநாடு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ,‌ இன்பத்தமிழன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பங்கேற்றனர்.

அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது
, “இந்த வெள்ளி விழா மாநாட்டில் எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து கலந்து வாருங்கள். எனது சார்பாகவும் அனைத்திந்திய அண்ணா திராவிடம் சார்பாகவும் கிருஷ்ணசாமி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வாருங்கள் என்று எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கிருஷ்ணசாமி ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. எல்லா சமூக மக்களின் பிரதிநிதியாக செயல்படக் கூடியவர். எல்லா சமூக மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அனைவருக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். வெள்ளி விழா என்பது ஒரு கட்சிக்கு திருப்பும் முனையாக இருக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வீர வரலாறு வெள்ளிவிழா மாநாடு திருநெல்வேலியில் நடந்தது. அதற்கு பின்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்றது. டெல்லியில் ஆட்சி அமைவதற்கு அண்ணா திமுக காரணமாக இருந்தது.

இன்று அண்ணா திமுகவின் ஆசிர்வாதம் முழுமையாக கிருஷ்ணசாமிக்கு உண்டு. கிருஷ்ணசாமியின் ஆசிர்வாதமும் எங்களுக்கும் உண்டு. எடப்பாடியார் எங்களிடம் சொல்லி அனுப்பினார் கிருஷ்ணசாமிக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று. வரும் பாராளுமன்ற தேர்தலில் திருப்புமுனை ஏற்படப் போகிறது.‌ டெல்லியை ஆளக்கூடிய மோடி தான் வேண்டும் என்பதில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எல்லா சமுதாய மக்களும் விரும்புகிறார்கள்.‌ அந்த அளவிற்கு வலுவான தலைமை மோடி தலைமை.

இந்தியாவின் இரும்பு மனிதனாக மோடி இருக்கிறார். அவர்தான் பிரதமராக வரவேண்டும் என்று இந்த மாநாட்டில் அத்தனை பேரும் அமர்ந்திருக்கிறோம். இந்தியாவை மிரட்டக்கூடிய அந்நிய சக்திகளை விரட்டக்கூடிய வலிமை படைத்த தலைவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு பேசுகையில்
, “ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசு முத்திரை சின்னமாக இருக்கும் கோபுரம் இருக்கின்றது. தற்போது இருக்கின்ற அரசு மாற வேண்டும். இந்த அரசின் அடையாளம் மாற வேண்டும் என்பதற்கு முதல் அத்தியாயமாக இந்த மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி நடத்தி இருக்கிறார், அவருக்கு நன்றியை சொல்கிறேன். புதிய தமிழகம் கட்சி சாமானிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழா கொண்டாடப்படுவது சாதாரண காரியம் அல்ல.‌ தமிழகத்தில் நேற்று முளைத்த காளான் போல் எத்தனையோ கட்சிகள் இல்லாமல் போனது.

இந்த மாநாட்டில் 13 அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் என்றைக்கும் தேர்தல் நடைபெற்றாலும் மீண்டும் செயின்ட் சார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்தான் முதலமைச்சர் என்று நாட்டு மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். ஏனென்றால் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆள தெரியவில்லை.

இந்த ஆட்சியாளர்கள் மக்களை போட்டு வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறார்கள். என்றைக்கு விடியல் வரும் என்கின்றார்கள் மக்கள். இந்த விடியல் வருவதற்கு அச்சாரமாக தான் இந்த மாநாடு என்று நினைத்துப் பார்க்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.