சிறுவயது குழந்தைகளுக்கு சிப்ஸ், குர் குர்ரே போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. வீட்டின் பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து, பள்ளிக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்திருக்கும் பாட்டி கடை வரை, சிறுவர்கள் கண்ணை கவரும் வகையில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும்.
1 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை வகையாக வகையாக இருக்கும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளை வாங்கித்தரும்படி, குழந்தைகள் பெற்றோரை நச்சரிப்பார்கள். அவை உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பதால் பெற்றோர்கள் அதனை வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், தற்போது பெற்றோர்களே அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்காசுகுர் தாலுகாவின் குனூர் கிராமத்தில், குழந்தைகள் சாப்பிட்ட 2 ரூபாய் மதிப்பிலான பல சிப்ஸ் பாக்கெட்டில், 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனால், பலரும் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தின் பாக்கெட்டுகளில் மட்டுமில்லை, பல்வேறு நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரூ. 500 நோட்
சிலருக்கோ 5-6 வரை 500 ரூபாய் நோட்டுகள் ஒரே பாக்கெட்டில் கிடைத்துள்ளன. ஒரு சிலருக்கு, 2-3 நோட்டுகள் கிடைத்துள்ளன. ஏறத்தாழ சுமார் 20 ஆயிரம் ரூபாய் மொத்தம் இந்த பாக்கெட்டுகளில் இருந்து கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
குனூர் கிராமத்தில் உள்ள சில கடைகளில் கிடைக்கும் இந்த பாக்கெட்டுகளில் கடந்த 5 – 6 நாள்களாக இதுபோன்று பணம் கிடைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று அப்பகுதியில், அந்த குறிப்பிட்ட சிப்ஸ் பாக்கெட் மொத்தமாக விற்றுத் தீர்ந்துள்ளது.
அதன்பின் வந்த புதிய பாக்கெட்டுகளில், அதுபோன்று பணம் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, நேற்று ஆசை ஆசையாக பாக்கெட்டுகளை வாங்கிக் குவித்தவர்களுக்கு சிப்ஸும், ஏமாற்றமுமே மிஞ்சியது. ஆனால், கடந்த 5-6 நாள்களில் மட்டும் எப்படி அதுபோன்று பணம் கிடைத்தது என அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பாக்கெட்டுகள் மூலம் கிடைத்த ரூ. 500 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக என சந்தேகம் எழுந்தது. ஆனால், அவை கள்ள நோட்டுகள் அல்ல என உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.