FIFA WorldCup Round up 2022: போர்ச்சுகல் கோச் விலகல் முதல் காய்ச்சலால் பாதித்த பிரான்ஸ் வீரர்கள் வரை

போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் விலகல்:

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி, மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர், 68 வயதான ஃபெர்னாண்டோ சாண்டோஸ், போர்ச்சுக்கல் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பிரான்ஸ் அணி வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு:

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அணியில் மூன்று வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணி பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசுகையில், “டயோட் உபமேகானோ மற்றும் அட்ரியன் ராபியோட் ஆகியோர் காய்ச்சல் காரணமாக இந்த வார தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடவில்லை. தற்போது கிங்ஸ்லி கோமனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், தங்கள் அணி வீரர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

எம்பாப்பே

எம்பாப்பே நெகிழ்ச்சி:

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் மொராக்கோ அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவடைந்த பின்னர் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பேவும் , மொராக்கோ அணி வீரர் ஹகிமியும் மைதானத்திலேயே கட்டிப்பிடித்து நட்பை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் தங்களுடைய டி-ஷர்ட்டை மாற்றி அணிந்து கொண்டனர். மேலும், எம்பாப்பே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘வருத்தப்பட வேண்டாம் சகோதரரே! நீங்கள் செய்ததை நினைத்து எல்லோரும் பெருமைப்படுவார்கள், நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

மொராக்கோ ரசிகர்கள் ஆவேசம்:

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோ அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் பெல்ஜியம் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸில் மொராக்கோ ரசிகர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொராக்கோ ரசிகர்கள், பிரஸ்ஸல்ஸ் சவுத் ஸ்டேஷன் அருகே போலீசார் மீது பட்டாசு மற்றும் பிற பொருட்களை வீசினர். காவல்துறை, நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தி கலவரத்தை அடக்கினர்.

FIFA 2022

இறுதிப்போட்டியின் நடுவர்:

கத்தாரில் நடைபெற்று வரும் FIFA 2022 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி மற்றும் பிரான்ஸ் அணி மோதுகின்றன. இந்த இறுதிப் போட்டியின் நடுவராக போலந்து நாட்டின் சைமன் மார்சினியாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்த உலகக் கோப்பை தொடரில், பிரான்ஸ் vs டென்மார்க் இடையேயான குரூப் ஆட்டத்திலும், அர்ஜென்டினா vs ஆஸ்திரேலியா இடையேயான நாக் அவுட் (சுற்று 16) ஆட்டத்திலும் நடுவராக செயல்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.