திருப்பூர்: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 12-வது தமிழ் மாநில மாநாடு திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தொடங்கியது. மாநிலத் தலைவர் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் தலைமை வகித்தார். செயல் தலைவர் கோதண்டம், மாநில துணைத்தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி கொடியேற்றி வைத்தார். வரவேற்பு குழு தலைவர் சின்னசாமி வரவேற்றார். மாநில செயலாளர் மணவாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். அகில இந்திய துணைத்தலைவர் நாராயணன், கேரள மாநில செயலாளர் பிரமோத், தென் பிராந்திய குழு ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
மாநாட்டில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியதாவது: “மத்திய சட்டத்துறை அமைச்சர், 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்க, வழக்கறிஞர்கள் தான் காரணம் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றங்களில் 30 சதவீத நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கும் வழக்கறிஞர்கள் தான் காரணம் எனவும் என, நீதித்துறை மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். முக்கியமான அமைச்சர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால், சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தடுக்கிறார்கள். சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதியை ஆளுநராகவும் ஆக்கி உள்ளனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு அரசியல் சாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தெரிவித்துள்ள 3 தலைப்பும் சமஸ்கிருதம் ஆகும். இது கண்டிக்கத்தது. உயர்நீதிமன்றத்திலும், அதன் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வழக்கறிஞர்கள் போராட வேண்டும். இதற்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானம் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற தீர்ப்பு முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி தமிழ் தான். முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக சதவீதம் நீதிபதியாகிறார்கள்.
ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைவான சதவீதமே நீதிபதியாக உள்ளனர். நீதி என்பது அனைத்து தரப்பினருக்கும் சமமாக இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாசனத்தின் சாரத்தை அனைவரும் இணைந்து காப்பாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநில பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன், பொருளாளர் சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.