திருமலை: ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் குளித்தபோது நீரில் அடித்து செல்லப்பட்ட 5 சிறுவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 3 பேரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா விஜயவாடா படமாடா பகுதியில் உள்ள தர்ஷிப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் ஷேக்பாஜி (15), ஷேக்உசேன் (15), தோட்டாகமேஷ் (15), மதலபாலு (17), இனக்கொள்ளு குணசேகர் (14), பின்னிண்டி சீனு மற்றும் ஷேக் காசிம் அலி. அனைவரும் நண்பர்கள்.
நேற்று கிரிக்கெட் விளையாட செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு யானைமலாகுதுரு பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினர். பின்னர் சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள குண்டூர் மாவட்டம் தாடேபள்ளி பாதூர் எட்டிபயாவில் உள்ள கிருஷ்ணா நதியை பார்க்க சென்றனர். அங்கு சீனுவை தவிர மற்ற 6 பேரும் நதியில் குளித்தனர். யாருக்கும் நீச்சல் தெரியவில்ைல. அதனால் நீரில் இறங்கிய சில நிமிடங்களில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீனு, அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு ஆடு, மாடு மேய்த்தவர்கள், மீனவர்கள் ஓடி வந்து ஆற்றில் குதித்து அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் காசிம் அலியை மீட்டனர். மீதமுள்ள 5 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
தகவலறிந்து பெனமலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் ஆற்றில் தேடினர். இதில் இனக்கொள்ளு குணசேகர், தோட்டா கமேஷ் ஆகியோரை சடலமாக மீட்டனர். ஷேக்உசேன், ஷேக்பாஜி, மதலபாலு ஆகியோரை தேடினர். இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் ேதடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.