சென்னை: ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆவின் வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சமையலுக்கு பயன்பத்தப்படும் உப்பு கலக்காத 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இந்த விலை உயர்வு இன்று (டிச.17) முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குநர் சுப்பையன் ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஆவின் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள், கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.