சென்னை: ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.680-க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல, 100 மி.லி. பாக்கெட் ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.70-க்கும், 15 கிலோ டின் ரூ.1,045 உயர்த்தப்பட்டு ரூ.10,725-க்கும் விற்கப்படும்.
மேலும், ஒரு லிட்டர் ஜார் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும், 5 லிட்டர் ஜார் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை விற்பனைப் பிரிவு உதவி பொது மேலாளர், துணை மேலாளர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3-வது முறையாக உயர்வு: நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை 3-வது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 4-ம் தேதி லிட்டர் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், ஜூலை 21-ம் தேதி ரூ.535-ல் இருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது 3-வது முறையாக ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விலை உயர்வைத் திரும்பப் பெற வேண் டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தலைவர்கள் கண்டனம்: இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆவின் பால் விலையை உயர்த்தி, வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த திமுக அரசு, மீண்டும் ஆவின் நெய் விலையை உயர்த்தியுள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி, லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா?’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல, வி.கே.சசிகலா, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.