கத்தார்: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக அமைதிச் செய்தியை உலக மக்களிடையே வீடியோ வடிவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கத்தாரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் மனித உரிமை அத்துமீறல் குறித்தும், உலக அமைதி குறித்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக வீடியோவில் தோன்றி பேசுவதற்கு ஃபிஃபாவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், ஜெலன்ஸ்கியின் கோரிக்கைய ஃபிஃபா நிராகரித்துள்ளது.
முன்னதாக, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு, முன்னர் உக்ரைனில் போரை நிறுத்துமாறு ஃபிஃபா கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் – ரஷ்யா: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனில் வீசி ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.