புதுடெல்லி: உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, தூதரக நடவடிக்கைகளை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். அதில் உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலை பேச்சுவார்த்தை, தூதரக ரீதியிலான நடவடிக்கைகளால் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று புதினிடம், பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமர் கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து இருந்தனர். அப்போதும் இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்று பிரதமர் மோடி புதினிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.
இதுகுறித்து ரஷ்யா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும், இதுவரை நடைபெற்ற விவகாரங் கள் தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம், அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ சாமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்(எஸ்சிஓ) இரு தலைவர்களும் சந்தித்து பேசியதன் தொடர்ச்சியாக தற்போது, இரு தலைவர்களும் பேசியதுடன், எரிசக்தி ஒத் துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும், இரு தரப்பு உறவுகள் குறித்தும் மறு ஆய்வு செய்ததுடன், இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிப்பதும், இந்தியாவின் நோக்கங்கள் குறித்தும், புதினிடம், பிரதமர் விளக்கி கூறினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.