“ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா…”- பேருந்தில் ஏறிய மூதாட்டியை திட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்

தஞ்சாவூரில், அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவரிடம் டிக்கெட் ஓசின்னா அடிக்கடி போயிட்டு போயிட்டு வருவியானு கேட்டு நடத்துனர் ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து மெலட்டூர் வழியாக திருக்கருக்காவூர் கிராமத்திற்கு 34 ஏ என்ற எண் கொண்ட அரசு நகரப்பேருந்து சென்று வருகிறது. அதில் தஞ்சாவூர் அருகே உள்ள வீரமாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் நடத்துனராக பணி புரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன் காலை 10:30 மணிக்கு சென்ற அந்த பேருந்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மெலட்டூர் கிராமத்தில் ஏறியிருக்கிறார்.

அவருக்கு மகளிர் இலவச பயணத்திற்கான டிக்கெட்டை நடத்துனர் ரமேஷ்குமார் வழங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து திருக்கருக்காவூருக்கு சென்றடைந்தது. அப்போது பயணிகள் அனைவரும் கீழே இறங்க அந்த மூதாட்டியும் இறங்கி விட்டார். பின்னர், பேருந்து மீண்டும் தஞ்சாவூருக்கு புறப்பட்ட போது அதே மூதாட்டி மீண்டும் பேருந்தில் ஏறி சீட்டில் அமர்ந்துள்ளார்.

அந்த மூதாட்டியிடம் நடத்துனர், தஞ்சாவூருக்கு போக வேண்டும் என்றால் மெலட்டூரில் ஏற வேண்டியது தானே, “காசு ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா?” என கோபமாக கேட்டு ஒருமையில் பேசினார். அதற்கு அந்த மூதாட்டி, “காசு ஓசினு நான் போயிட்டு போயிட்டு வரல தம்பி தெரியாம ஏறிட்டேன், அதுக்கு ஏன்? தம்பி இப்படி கோபமாக பேசுறீங்க கோயிலுக்கு மாலை போட்டு இருக்குற நீங்க இப்படி பேசலாமா?” என அப்பாவியாக கேட்டார்.

நடத்துனர், மூதாட்டியிடம் நடந்து கொண்டதை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, இந்த சம்பவம் குறித்து தனி அதிகாரி ஒருவரை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

மூதாட்டியை கோபமாக பேசிய நடத்துனர்

அந்த அதிகாரி விசாரணை செய்து கொடுத்த தகவலின் அடிப்படையில் நடத்துனர் ரமேஷ்குமாரை கோட்ட பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பயணிகளிடம் கண்ணியம் இல்லாமல் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் டிரைவர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து நடத்துனர் ரமேஷ்குமார் கூறுகையில், “வயதானவர் என்பதால் பேருந்தில் அடிக்கடி ஏறி இறங்கினால் கீழே விழுந்து விடுவார் என்றே கோபமாக பேசினேன். அப்போது ஓசி என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன் அது தவறு தான். அவர் எனது தாய் போன்றவர் என்பதால், கீழே விழுந்து விடக்கூடாது என்ற அக்கறையில் அப்படி பேசினேன். அது தவறாகி விட்டது. என்னோட இந்த செயலுக்காக நான் வருந்துகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.