சமீபத்தில் நடந்துமுடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வே மீண்டும் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த அதேவேளையில், காங்கிரஸ் ஒரு வரலாற்று தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம். அதாவது, பா.ஜ.க 156 இடங்களில் வெற்றிபெற, வெறும் 17 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த மோசமான தோல்விக்கு ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியை சிலர் காரணம் கூறுகின்றனர்.

கடந்த தேர்தலை விடவும் 4 சதவிகித வாக்குகளை அதிகமாகப் பெற்று 53 சதவிகித வாக்குகளுடன் ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக்கொள்ள, 5 இடங்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி 13 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. காங்கிரஸின் வாக்கு சதவிகிதமோ 27 சதவிகிதமாக குறைந்த விட்டது. இதனால்தான் காங்கிரஸ் தோற்றது என்று சிலர் விமர்சிக்கின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று, குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி பா.ஜ.க-வின் பி (B) டீமாக செயல்பட்டது என்றும், ஆம் ஆத்மி இல்லாவிட்டால் பா.ஜ.க-வை காங்கிரஸ் தோற்கடித்திருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி மீதான ராகுல் காந்தியின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் காங்கிரஸை சாடியிருக்கிறார். இதுகுறித்து இன்று பேசிய பகவந்த் மான், “ராகுல் காந்தி குஜராத்துக்கு எத்தனை முறை வந்தார்… ஒரேயொருமுறை வந்துவிட்டு, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினார்.

சூரியன் மறையும் இடத்தில் (குஜராத்) தேர்தல் நடந்தது. ஆனால் ராகுல் காந்தியோ சூரியன் உதிக்கும் இடத்தில் (கன்னியாகுமரி) யாத்திரையைத் தொடங்கினர். முதலில் அவர் தன்னுடைய நேரத்தை சரிசெய்யட்டும். மேலும் காங்கிரஸ், ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையில்லாத எதிர்க்கட்சிக்கு எம்.எல்.ஏ-க்களை விற்குமளவுக்கு ஏழ்மையாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி கோமாவில் இருக்கிறது” என்று கூறினார்.