சாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை உறவினர்களே ஆணவ கொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் அது போன்ற ஒரு கொடிய சம்பவம் நடந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பிர்பிம்பல்காவ் என்ற கிராமத்தை சேர்ந்த சூர்யகலா சந்தோஷ் என்ற 17 வயது பெண் தன் உறவுக்கார வாலிபர் ஒருவருடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. உடனே அவரின் தந்தை சந்தோஷ் சரோடே, தன்னுடைய மகளை தொடர்பு கொண்டு இருவருக்கும் தானே திருமணம் செய்து வைப்பதாக கூறி வீட்டுக்கு வரவைத்தார்.
அந்தப் பெண்ணும் தன் தந்தையின் சொல்லை கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுமையாக நடந்து கொண்டிருந்தது. திருமண மண்டபம் கூட புக் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட உறவினர்களுக்கு மட்டும் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சூர்யகலா திருமண மண்டபத்தில் இருந்த போது, அவரின் தந்தை சந்தோஷ் மற்றும் உறவினர் நாம்தேவ் ஆகியோர் இணைந்து அவரை இழுத்து சென்றனர். வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் சூர்யகலாவை கழுத்தில் கயிற்றை கட்டி தொங்கவிட்டனர். பின்னர் உடலை இறக்கி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவத்துக்கு வீட்டில் உள்ள யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சமுதாயத்தில் தங்களது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என்று கருதி இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு சந்தோஷ் உட்பட இரண்டு பேரையும் கைது செய்தனர். அதன் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அதோடு போலீஸார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.