ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி வருகிறது. சமீபத்தில் ஓசூர் மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்தும் தற்போது வரை பல்வேறு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. நேற்று ஓசூர் உழவர் சந்தை சாலையில் சென்ற பேருந்து, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்களை உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக சென்றது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.