புதுடெல்லி: ராகுல்காந்தி சீனா மற்றும் ராகுல்காந்தி மொழியில் பேசுவதாகவும் அவரை காங்கிரஸ் தலைவர் கார்கே உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று முன்தினம் 100 நாளை எட்டியது. இதனை தொடர்ந்து நடந்த சிறப்பு கூட்டங்களில் பங்கேற்ற ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘சீனா போருக்கு தயாராகி வருகின்றது. ஆனால் இந்த அச்சுறுத்தலை ஒன்றிய அரசு புறக்கணிக்க முயற்சிக்கின்றது. அருணாசலப்பிரதேசத்தில் இந்திய வீரர்கள் சீன வீரர்களால் அடிக்கப்படுகிறார்கள்’என்றார். ராகுலின் இந்த கருத்துக்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜ தலைவர் ஜேபி நட்டா கூறுகையில்,” ராகுலின் இந்த கருத்து அவரது தேசபக்தியை குறித்து கேள்வி எழுப்புகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் விமான தாக்குதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ராகுலின் கருத்துக்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது” என்றார். பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாடியா கூறுகையில்,” காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ரிமோட் கன்ட்ரோல் போல் செயல்படவில்லை என்றால், எதிர்கட்சிகள் நாட்டிற்கு ஆதரவாக இருந்தால், இந்தியாவை இழிவுபடுத்தும் மற்றும் மனஉறுதியை சீர்குலைக்கும் கருத்தை கூறிய ராகுல்காந்தியை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ராகுல்காந்தி தனது தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பதால் அவரது பாவங்கள் தீராது. ஆனால் அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார் என்பதை அது நிரூபிக்கும்” என்றார்.
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில்,” ராகுலின் அறிக்கை எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனென்றால் டோக்லாம் பிரச்னையின்போது அவர் சீன அதிகாரிகளுடன் சூப் அருந்திக்கொண்டு இருந்தார். இவர்கள் சீன என்ற பெயரில் பயத்தை உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இது 1962ம் ஆண்டு இந்தியா இல்லை. இது 2014ம் ஆண்டு இந்தியா. பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா முன்னேறி வருகின்றது” என தெரிவித்தார். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,” ராகுல்காந்தி கருத்து இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறது. ராகுல்காந்தி காங்கிரசுக்கு மட்டும் பிரச்சினை அல்ல… அவர் நாட்டிற்கும் மிகப்பெரிய அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப்படுகின்றனர்” என்றார்.
* நாட்டிற்கே அவமானம் கிரண் ரிஜிஜூ
ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ ராகுல்காந்தி இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும்களங்கம் விளைவிக்கிறது. ராகுல்காந்தி காங்கிரசுக்கு மட்டும் பிரச்சினை அல்ல… அவர் நாட்டிற்கும் மிகப்பெரிய அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப்படுகின்றனர்’ என்றார்.