இந்தியாவிலே முதன் முறையாக சீர்காழி பள்ளி மாணவர்களே உருவாக்கிய தொலைநோக்கி மூலம் (டெலஸ்கோப்) சுமார் 73 கோடி கி.மீ தூரத்தில் இருக்கும் வியாழன் கோளைப் பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர். இதில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரும் பங்கேற்றுப் பாராட்டியுள்ளது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளியில் இரண்டு நாள்கள் தொலைநோக்கி பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சுதீஷ் ஜெயின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொலைநோக்கி பயிற்சிப் பட்டறையை இளம் விஞ்ஞானிகள் பரத்குமார் வேலுச்சாமி மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகியோர் இரண்டு நாள்கள் பள்ளி மாணவர்களுக்காக நடத்தினர். இப்பயிற்சியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையுள்ள 39 மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து தாங்களாகவே தொலைநோக்கி செய்யும் பயிற்சியைப் பெற்றனர்.
பள்ளியில் இது போன்ற பயிற்சிப் பட்டறை நிகழ்வது இந்தியாவில் இதுவே முதல்முறை என்றும், தொலைநோக்கி, விஞ்ஞான ஆய்வுகளின் கண்களாக உள்ளது என்றும், நட்சத்திரங்கள், கோள்கள், சூரியக் குடும்பம் மற்றும் அண்டம் பற்றியும் விரிவாக மாணவர்களுக்குத் தெளிவுபடுத்திக் கற்பித்தார் விஞ்ஞானி இங்கர்சால். இந்தப் பயிற்சிப் பட்டறையை சீர்காழியைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கி கொண்டு பள்ளி வளாகத்தில் இரவில் வைத்து அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வானில் தென்படும் வியாழன், செவ்வாய் கோள்களைப் பார்த்து மகிழ்ந்தனர். இந்தத் தொலைநோக்கியைக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் சார்ந்த துறையில் உருவாக்கத் தயங்கும் இந்தச் சூழலில், சீர்காழி போன்ற கடைமடைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உருவாக்கியிருப்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.