தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
பிரதமர் மோடி ஆட்சியில், பா.ஜ., பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலால், மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து, மக்களை ஒன்றுபடுத்த, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம், 12 மாநிலங்களில், 3,500 கி.மீ., துாரத்தை, 150 நாட்களில் கடந்து பிப்., முதல் வாரத்தில், ஜம்மு – காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.
தமிழக காங்., கோஷ்டிகளை ஒற்றுமைப்படுத்த, ராகுல் ஒரு நடைபயணம் வந்தா நல்லாயிருக்கும்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
‘உதயநிதி, காமராஜர் ஆட்சி தருவார்’ என, பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். காமராஜர் உயிரோடிருந்த போதும், அவரை அவமானப்படுத்திய காங்கிரஸ், அவர் மறைந்த பின்னும் அவமானப்படுத்துகிறது; வெட்கம், வேதனை!

கருணாநிதி, ஸ்டாலினால தர முடியாத காமராஜர் ஆட்சியை, உதயநிதி தந்துடுவாரா என்ன?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
முதல்வரின் மகன் அல்லாத வேறு ஒரு சிறப்பை, உதயநிதி குறித்து கூற முடியுமா? பிரசாரம் செய்தார் என்பது தகுதி என்றால், தி.மு.க., பேச்சாளர்கள் எத்தனை பேர் அமைச்சராகினர் என்று கூற முடியுமா? வயதுக்கேற்ற பேச்சு, முதிர்ச்சி குறைந்தபட்சம் கூட இல்லை. குடும்ப உறுப்பினர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்ற, உதயநிதி தந்தையின் ஆசை, நாட்டிற்கு பேராபத்து.
முதல்வரின் மகன் பதவிக்கு வந்ததற்கே இவ்வளவு மனம் வருந்துறீங்களே… அடுத்த சில ஆண்டுகள்ல பேரன் இன்பநிதியும் வருவாரே… அப்ப என்ன செய்வீங்க?
மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை:
பிறப்பு முதல் இறப்பு வரை, நம் வாழ்க்கையை லஞ்சத்தின் கரங்கள் துரத்துகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘தமிழகத்தின் லஞ்சப் பட்டியலை’ கமல், திருச்சியில் வெளியிட்டார். அன்றிருந்த அரசும், இன்றிருக்கும் அரசும், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.
கமலின் நண்பர் உதயநிதி அமைச்சராகிட்டாருல்ல… இனிமே, துாய்மையான தமிழகம் உருவாகிடும்… பாருங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்லுாரிகளிலும், தமிழ் பாடத்தை கற்பிக்க தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொறியியல் படிப்பில், தமிழ் பாடத்திற்கான பாட வேளைகளை அதிகரிக்கவும், அடுத்த ஆண்டிலிருந்து, இரண்டாம் ஆண்டின் இரு, ‘செமஸ்டர்’களிலும், தமிழை கட்டாய பாடமாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘இதை எல்லாம் செய்தால் தான், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேரும்’ என்ற நிபந்தனை விதித்தால் என்ன?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்