ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டத்தில் நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில், உள்ளே தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தீக்கிரையாகினர். தெலங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவையா (50), பத்மபதியா (45) தம்பதியினர். அவர்களது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் சந்தையா (40), மவுனிகா (35), ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோர் வந்திருந்தனர்.
வீட்டில் இருந்த 6 பேரும் நேற்று இரவு சாப்பிட்ட பின், படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 பேரும் உடல்கள் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்த மஞ்சிரியாலா போலீசார், தீயில் கருகிய 6 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது யாராவது கதவை தாழிட்டு வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் கூறினர்.