குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின் போது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அவரின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் 11 பேருக்கு 2008-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. பின்னர், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறை தண்டனை முடியும் முன்பாக விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தன்னை சிறை தண்டனை முடியும் முன்பே விடுவிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றத்தின் வழக்கு விசாரணை மும்பையில் நடந்திருந்தாலும், குற்றம் குஜராத்தில்தான் நடந்திருக்கிறது. எனவே வழக்கில் விசாரணை முடிந்து தண்டனை விதிக்கப்பட்ட பிறகு குற்றவாளியின் தண்டனையை குறைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், மனுதாரரின் மனு மீது இரண்டு மாதத்தில் முடிவு செய்யும்படி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில்தான் குஜராத் அரசு 11 பேரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்தது. ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதாலும், நன்னடத்தை காரணமாகவும் அவர்களை விடுதலை செய்வதாகவும், இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று இருப்பதாகவும் குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.