பாட்னா: பிஹார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவை, நிதிஷ் குமார் இப்போதே முதல்வராக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் தற்போது பிஹார் முதல்வராக இருக்கிறார். கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தார்.
நிதிஷ் குமாரின் அறிவிப்பு: இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், “நான் பிரதமர் வேட்பாளரும் அல்ல; முதல்வர் வேட்பாளரும் அல்ல. எனது இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான்” என தெரிவித்தார். மேலும், தேஜஸ்வி யாதவ் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பால் வியப்படைந்த செய்தியாளர்கள், அப்படியானால் பிஹாரில் 2025-ல் நடைபெற இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலை தேஜஸ்வி யாதவ் வழிநடத்துவாரா என கேள்வி எழுப்பினர். அப்போது, அருகில் இருந்த தேஜஸ்வி யாதவை பிடித்தபடி, “நிச்சயமாக. இவர்தான் வழிநடத்துவார். புரிகிறதா?” என குறிப்பிட்டார். பிஹாரில் 8 முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமார், தனது அரசியல் வாரிசாக தேஜஸ்வி யாதவை அறிவித்ததோடு, இனி முதல்வர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பிரசாந்த் கிஷோர் கருத்து: இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஹாரைச் சேர்ந்த அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “மகாகத்பந்தன் கூட்டணியில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம்தான். அதுதான் பெரிய கட்சி. அப்படி இருக்கும்போது தேஜஸ்வி யாதவ் ஏன் 2025 தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்? நிதிஷ் குமார் அவரை இப்போதே முதல்வராக்க வேண்டும். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிட்டும். அவரது தகுதியை மக்களும் அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில், மக்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாரின் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அவரே, நிதிஷ் குமாருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.