வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
என்ன தான் அஞ்சல் அட்டை என்று மொழி மாற்றம் ஆனாலும் போஸ்ட் கார்ட் என்னும் பொருளும் வார்த்தையும் இன்னும் எங்கள் குடும்பங்களில் வழக்கொழியா சொல்லாகவே உள்ளது.
ஒருத்தருக்கு ஒரு தகவலை சொல்லாமல் விட்டு விட்டால், சமயத்தில் வேண்டும் என்றே கூட விட்டிருப்பார்கள். அது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்திருக்கும். ஒரு போஸ்ட் கார்டுக்கு கூட லாயக்கில்லாமல் போய்ட்டேனா என்று தான் சண்டையை ஆரம்பிப்பார்கள்.

அப்புறம் அதில் ரெண்டு பேர் புகுந்து சண்டையை விலக்கி சமாதானம் செய்து வைப்பார்கள். குடும்பங்கள் சேர்ந்து விடும். சண்டையும் சச்சரவுமாக உறவுகள் நெருங்கி இருக்கும்.
ரொம்ப கோபமாக இருந்தாலும் தகவல் சொல்லி விட பிடிக்கவே பிடிக்காமல் போனாலும் கால் கடுதாசியை எழுதிப் போடு அதாவது ஒரு போஸ்ட் கார்டு என்று சொல்வதுண்டு.

கூட்டு குடும்பம் உடைந்து தனிக்குடித்தனமாகி இப்போது குடும்பங்களும் குலைந்து வரும் காலம்.
எனக்கு ஐந்து அக்காக்கள். நான் சிறுமியாக இருக்கையில் என் அம்மா லட்சுமி ஏதோ ஒரு அக்காவின் பிரசவத்திற்கு மெட்றாஸ் போய் விட்டாள்.
நானும் அப்பாவும் மட்டும். எனக்கோ காலில் சிலந்தி என்னும் சொறி சிரங்கு. எண்ணையில்லாமல் பத்திய சாப்பாடு சாப்பிட சொல்லியிருக்க, சிலந்தி புண் தீவிரமாகி தினம் வைத்தியரிடம் போய் கட்டு போட்டுக் கொண்டிருந்தேன்.

எப்போதும் அழைத்து செல்லும் வண்டிக்கார சாயபு மாமா என் சிரங்கைக் கண்டு பரிதாபப்பட்டு பத்தியமா இருந்தா நல்லாயிடும் என்று ஆறுதல் சொன்னார்.
அம்மா ஊருக்கு போனால் எங்களை டேக் ஓவர் பண்ண சித்தி வருவாள். ஒரு வாரமாகியும், வர வேண்டிய சித்தி வரவில்லை. இதில் எங்கிருந்து பத்தியமாக சாப்பிடுவது.
செம்ம கோபம் எனக்கு. அப்பா அக்காவுக்கு எழுதி என்னிடம் தபாலில் சேர்க்க சொன்ன போஸ்ட் கார்டின் பக்கவாட்டில் லட்சுமி செத்து போய்ட்டா என்று நுணுக்கி எழுதி போஸ்ட் பண்ணிட்டேன்.

என் அம்மா லட்சுமி இங்கே இருக்கா? எந்த லட்சுமி செத்து போன?என்று குழப்பம். வாழைப்பழம் காமெடி போல. அம்மா மீதிருந்த கோவத்தில் அப்படி செய்துவிட்டேன். யார் அப்படி எழுதினார்கள் என்று கண்டுபிடிக்கவே பல வருடங்கள் ஆனது.
நான் திருமணம் முடித்து கொஞ்ச வருடங்கள் கழித்து இந்த போஸ்டகார்டு பேச்சு வர, அதை நான் தான் எழுதினேன் என்று சொல்ல அடிப்பாவி என்று எல்லோரும் சிரிக்க…
போஸ்ட் கார்ட் தலைப்பைக் கண்டதும் பழைய நினைவில் புன்னகைத்தேன்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.