குஜராத்தில் ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் வாங்கிய கடனின் வட்டியை கொடுக்காததால் அவரின் மனைவியை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், கடந்த பிப்ரவரி மாதம் அஜித்சிங் சாவ்தா என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடனாக வட்டிக்கு வாங்கியுள்ளார். அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பி அளிக்க முடியாததால், தினமும் ரூ. 1500 வட்டியாக தரவேண்டும் என அஜித்சிங், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார்,.
அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் வட்டியும் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். நீண்ட நாள்களாக வட்டியை தராததால், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் அத்துமீறி புகுந்த அஜித்சிங்கும் மற்றும் அவரின் கூட்டாளிகளும் ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோ எடுத்ததுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை கோயிலுக்கு தூக்கிச்சென்ற அஜித்சிங், அந்த பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து, ‘நான் தான் உனது கணவர்’ என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பலமுறை ஆட்டோ ஓட்டுநரின் வீடு புகுந்து அஜித்சிங் அவரது மனைவியை பாலியன் வன்புணர்வு செய்துள்ளார்.
இவையனைத்தும், பாதிக்கப்பட்ட அந்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி போலீசாரிடம் புகாராக அளித்துள்ளார். ஆனால், பலமுறை அவரின் புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளனர். எனவே, நீதிமன்றத்தை அந்த பெண் நாடியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் வாக்குமூலத்தை நேற்று முன்தினம் வாங்கிய போலீஸார், அதே கையோடு அந்த தகவலை அஜித்சிங்கிடமும் தெரிவித்துள்ளது. தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அஜித்சிங், தனது இரண்டு கூட்டாளிகளுடன் ஆட்டோ ஓட்டுநரிடம் நேற்று மாலை சமாதானம் பேசியுள்ளார். மேலும், தனக்கு கடனை திருப்பி அளிக்க வேண்டாம் என்றும் அவரின் மனைவிக்கு தான் இழப்பீடாக பணம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில், ஆட்டோ ஓட்டுநரின் மனைவி அங்கு வரவே, அவரை அஜித்சிங் கூட்டாளிகள் கத்தியை வைத்து தாக்குதல் செய்து அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மூன்று குற்றவாளிகள் மீது இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.