சமீபமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை-க்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்துவருகிறது. அதன் நீட்சியாக சமீபத்தில் அண்ணாமலை கட்டியிருக்கும் கைகடிகாரம் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கியது என சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆடுகள் வளர்த்து சேர்த்து, 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” எனச் சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஆகஸ்ட் 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கும் விடாமல் உடனே பதிலளித்திருக்கும் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 202 -ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” எனப் பதிவிட்டிருக்கிறார்.