சென்னை: “அதிமுக ஆட்சியில் தீபாவளியின்போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. கடந்தாண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருந்தது மிகப்பெரிய சாதனை. இந்த தீபாவளியின்போது 116 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். திருமண விழாவில் முதல்வர் பேசியது: “அமைச்சர் நாசர், பால் வளத்துறை அமைச்சராக பாராட்டுக்குரிய வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் பால் விலை குறைந்துவிட்டது. அதுவே, மக்களுக்கு ஒரு சாதகமான சூழல் இருந்ததை புரிந்து கொள்ள முடியும்.
பால் விலையை குறைத்ததன் காரணமாக, 4 லட்சத்து 20 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். நாசர் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்தான், ஆவினில் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது, தீபாவளியின்போது நெய் விற்பனை அதிகமானது, புதிய இனிப்பு வகைகள் அறிமுகம், 12 வகையான கேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தீபாவளியின்போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. கடந்தாண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருந்தது மிகப்பெரிய சாதனை. இந்த தீபாவளியின்போது 116 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஆட்சியைவிட பால் பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதற்கு முதல்வராக இருக்கும் நான் மட்டும் காரணம் அல்ல. இந்த துறையின் அமைச்சராக இருக்கும் நாசரும் ஒரு காரணம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.