ஆலப்புழா: கேரளாவின் அழகு நிறைந்த மாவட்டங்களில் ஒன்று ஆலப்புழா. நீர் நிலைகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் கலெக்டர் வி ஆர் கிருஷ்ண தேஜா அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் பதிவுகளை வெளியிடுவார். சமீபத்தில் அப்படி வெளியிட்ட அவரின் பதிவு பலரின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. தந்தை, தாயை இழந்த ஒரு பெண் குறித்து அவர் பதிவிட்ட மலையாள மொழிபெயர்ப்பு இது.
“அம்மாவுக்கு பிறகு அக்கா தானே நம் எல்லோருக்கும் அம்மா. அப்படியொரு அம்மாவை அன்றொரு நாள் நான் பார்த்தேன். தோட்டப்பள்ளியைச் சேர்ந்த இந்தப் பெண்ணை கலெக்டர் அலுவகத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு தந்தையையும் தாயையும் பறிகொடுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் வறுமை. இதை அறிந்தபின், கூடுதலாக அவரின் குடும்பத்தை பற்றி அதிகம் கேட்கத் தொடங்க, தான் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவி என்று கூறினார். என்ன ஆயிற்று என்று கேட்டபோது பண கஷ்டத்தால் மருத்துவ படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று என்று வருத்தத்துடன் கூறினார்.
பின், உனக்கு படிக்க உதவி தேவையா அதற்காக தான் கலெக்டர் அலுவலகம் வந்தாயா என்று கேட்க, ‘இல்லை எனது தம்பியின் படிப்பு முடங்கிவிட கூடாது. என்னைவிட அவனின் படிப்பே பிரதானம், அதற்கு ஏதும் உதவி கிடைக்குமா என்று கேட்கவே கலெக்டர் அலுவலகம் வந்தேன்’ என்று அப்பெண் என்னிடம் கூறினார்.
இன்ஜினியரிங் படிக்கும் தனது தம்பியின் படிப்பே முக்கியம் என்று தன் தம்பி மீதான பாசத்தையும் அன்பையும் அப்பெண் வெளிப்படுத்தியதை கண்டு நான் உட்பட எங்களைச் சுற்றி இருந்தவர்கள் ஒரு நிமிடம் நெகிழ்ந்து கண் கலங்கினோம். தன்னைவிட தம்பியின் படிப்பே முக்கியம் என்ற அந்தப் பெண்ணுக்கு எதாவது உதவ என் மனம் நினைத்தது. எனக்கு தெரிந்த தொழிலதிபர் ஒருவரிடம் பேசி, உடனடியாக அப்பெண்ணின் தம்பியின் படிப்புக்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொள்ள சொன்னேன். அவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். இனி அப்பெண் விரும்பியபடி அவளது தம்பி பண நெருக்கடி இல்லாமல் படிக்கலாம். இப்பெண்ணுக்கும், அவரின் தம்பிக்கும், அவர்களுக்கு உதவிய அந்த தொழிலதிபருக்கும் நம் வாழ்த்துக்கள் தேவை.
இப்போது சொல்லுங்கள் அம்மாவுக்கு பிறகு அக்கா தானே நம் எல்லோருக்கும் அம்மா என்பது உண்மைதானே.” என்று தெரிவித்துள்ளார். இப்பதிவுக்கும் கலெக்டரின் உதவிக்கும் ஏராளமான வரவேற்புகளும் வாழ்த்துக்களும் கிடைத்து வருகின்றன.
பலரும் “இந்தப் பெண்ணையும் படிப்பை தொடர வைக்க முயற்சி எடுக்க வேண்டும்” என்று கருத்துக்கள் பதிவிட, அதற்கு பதிலளித்த கலெக்டர் கிருஷ்ண தேஜா, “நிச்சயம் அதுவும் நடக்க வேண்டும். அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.