சேலம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் குறித்து பேசி வரும் நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்பட்டு வருகிறார். இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் சங்கம் கடுமையான போராட்டத்தை அறிவிக்க உள்ளது, என சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் கூட்டாக அறிவித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் பேரவையை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை அசைக்கும் அளவில், நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த முடியாத அளவுக்கு கடும் போராட்டம் அறிவிக்கப்படவுள்ளது. 2024-ம் ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலில், அரசு ஊழியர்களின் 6 சதவீதம் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை இனிமேல் நம்ப போவதில்லை.
தீவுத்திடல் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளார். எங்களுடைய கோரிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை என்று காரணம் கூறுவது ஏற்க முடியாது. முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் பற்றி பேசுகிறார். ஆனால், நிதி அமைச்சரோ கார்ப்பரேட் மாடலுக்காக செயல்படுகிறார். எங்களது போராட்டம் கார்ப்பரேட் மாடலுக்கு எதிரானதாக அமையும்.
சமூக நீதி பேசும் திமுக அரசு, சமூக நீதியை சீர்குலைக்கக் கூடிய அரசாணைகள் 115, 139 மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. இந்த அரசாணைகள் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை இனி வரும் காலங்களில் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் மூலமாக பணி நியமனம் செய்வதற்கு பதிலாக, அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனங்களை கொண்டு ஆட்கள் நியமனம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்க முடியாமல் 69 சதவீதம் சமூக நீதி இட ஒதுக்கீடு, குழி தோண்டி புதைக்கப்படும் நிலை உருவாகும். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என திமுக அரசு இரட்டை தன்மை கொண்ட அரசாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என திமுக அரசு இரட்டை தன்மை கொண்ட அரசாக உள்ளது.