ஆளவந்தார் அறக்கட்டளையின் 1,054 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க ரூ.11 கோடியில் 10 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச் சுவர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சாலவான்குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.10.44 கோடியில் தடுப்புச் சுவர் கட்டும் பணியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும், கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த, கிராமத்தைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்றுகளை பயிரிட்டு, கடற்கரைப் பகுதியை பசுமையாக பராமரித்து வந்தார். இதனைப் பார்த்த ஆங்கிலேயே அதிகாரிகள் இவருக்கு இவர் பராமரித்து வந்த பகுதிகளை உள்ளடக்கி 1,054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி ஆளவந்தாரை கவுரவித்தனர்.

இந்நிலையில், தான் உயிரிழந்த பிறகு தனது பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் தர்ம சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென, கைப்பட உயில் எழுதி வைத்துவிட்டு ஆளவந்தார் மறைந்தார். மேலும், இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், மாமல்லபுரம் ஸ்ரீ ஸ்தலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்பதி பெருமாள் கோயில்களில் உற்சவம் நடக்கும்போது, அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் அந்த உயில் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும், இவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சொத்துக்களை தனிநபர்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடந்த, சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், இனியும் யாரும் ஆக்கிரமிக்காத வகையில் 10 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச் சுவர் கட்ட இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.10.44 கோடி மதிப்பில் சுவர் கட்டும் பணிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சாலவான்குப்பத்தில் சுவர் கட்டும் பணிக்கு செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், திருவிடந்தை கோயில் செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.