தாம்பரம்: தாம்பரம் அடுத்த ஆதனூர், காந்தி நகரை சேர்ந்தவர் திரிசங்கு (75). இவரது மனைவி வனரோஜா (62). கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது கணவர் திரிசங்கு, அவரது மகன் யுகசெல்வம், மகள் நிர்மலா தேவி ஆகிய மூவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூவரும் நேற்று முன்தினம் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.