கோவை: பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, நமது பிரதமர் மோடியை ‘கசாப்பு கடைக்காரர்’ என தரம்தாழ்ந்து விமர் சித்துள்ளார். அதுமட்டுல்லாது, ‘பிரதமர் மோடியும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஹிட்லரின் நாஜி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.
பிலாவல் பூட்டோ சர்தாரி, தனிப்பட்ட மோடியை எதிர்க்கவில்லை. இந்தியாவை உலகின் வல்லரசாக உயர்த்திக் கொண்டிருக்கும் பிரதமர் என்பதால் தான், விமர்சித்திருக்கிறார். அதாவது இந்தியாவை, 140 கோடி மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். எனவே, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அமைதி காப்பது நாட்டின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
எனவே, இனியாவது பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தக்க நேரத்தில், இந்திய மக்கள் பதிலடி கொடுப் பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.