மதுரை: சட்ட விரோத ஆயுத வழக்குகளை போலீசார் விரைந்து விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, நாகனாகுளத்தைச் சேர்ந்த வக்கீல் கார்மேகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 26.1.2018ல் குடியரசு தினத்தன்று 5 கள்ள துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுடன் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கைதானார். இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரனும் கைதானார்.
இவர்களுக்கு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மூலம் சென்னை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலருக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பறிமுதல் வழக்கை தமிழக போலீசார் சிறப்பாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் குறைபாடு இருந்ததாக எந்த ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் விசாரணையை வேறு அமைப்புகளுக்கு மாற்ற வேண்டியதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதை தடுக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
சுய பாதுகாப்புக்கு ஆயுதம் வைக்க உரிய அதிகாரியிடம் உரிமம் பெற வேண்டும். ஆயுத உரிமம் வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரின் முன்நடத்தை, வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. உரிமம் பெறாத ஆயுதங்கள் பயன்பாட்டை முழுமையாக தடுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் அறிக்கை திருப்தியாக உள்ளது. இதனால் சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை. தமிழக போலீஸார் சட்டவிரோத ஆயுத வழக்குகளின் விசாரணையை, குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைவில் விசாரிக்க வேண்டும். விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருந்து சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.