ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சித்ரா (வயது 35 – பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு விஜய் என்ற நபருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக கார் ஷோரூம் ஒன்றில் புதிய கார் வாங்குவதற்காக தந்தை ராமசாமி, மகள் சித்ரா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அங்கு சசி என்ற நபர் கார் மாடல்கள் தற்போது குறைவாக உள்ளதாகவும், புதிய மாடல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதாக வடிவுக்கரசியின் முழு விவரங்களை பெற்று திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இதில் அவருக்கும் சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில், கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி சசியுடன் சித்ரா வாழ்ந்து வந்தார். சசிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ. 30 லட்சம் வரை பணம் பெற்று சித்ரா சசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சசி மற்றும் சித்ரா கரூரில் சவர்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சித்ராவின் தந்தை ராமசாமி மற்றும் அவரின் உறவினர்கள் அந்த கடைக்கு இன்று நேரில் சென்று தங்களது குடும்பத்தை சீரழித்து விட்டதாக கேள்வி எழுப்ப, சசி தகாத வார்த்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, சசியை உறவினர்கள் ஒன்று கூடி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மடவளாகம் பகுதியில் அடித்து தரதரவென சாலையில் இழுத்து வந்துள்ளனர். இதில் சசிக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் விரைந்து வந்து சசியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ராமசாமி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.