பத்துகாணி அருகே காட்டு யானை இறந்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

அருமனை: பத்துகாணி அருகே காட்டு யானை இறந்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்துகாணி தபால் நிலையம் அருகில் கடந்த 7ம் தேதி இரவில் திடீரென்று காட்டு யானைகள் கூட்டமாக வந்தது. இரண்டு பெரிய காட்டு யானைகள் தென்னை மரத்தை காலால் மிதித்து ஓலைகளை சுவைத்து சென்றது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தங்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரவில் காட்டுயானைகள் வலம் வந்தவண்ணம் இருந்தது.

இந்தநிலையில் பத்துகாணி அருகே கற்றுவா, கூனாம் வேங்கை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் தடுக்கி விழுந்து இறந்திருந்தது. தொழிலாளி ஆனந்த் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

களியல் வனசரக அலுவலர் முகம்மது முகைதீன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். பின்னர் யானையை வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளது. டாக்டர் மனோகரன் தலைமையில் திருநெல்வேலியில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக களியல் வனச்சரக அலுவலர் முகம்மது முகைதீன் கூறியதாவது:
 
யானையின் மரணம் இயற்கையானதுதான். மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது, மாலை 6.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து புதைக்கப்பட்டுள்ளது. இறந்த யானையின் வயது 45க்கு மேல் இருக்கும். வயிற்றில் கோளாறு இருந்துள்ளது, அதனால் உணவு குழாய் அடைத்துள்ளது. அது சரியாகாததால் இறந்துள்ளது.

மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் சிவகுமார் முன்னிலையில் அருகே உள்ள ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் யானை உடல் புதைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.