புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கும் வாரணாசியில் நுழைபவர்கள் உடலில் ஆன்மீக அதிர்வலைபாயும் என்று கூறுவதுண்டு. இதை உணர்ந்தவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை கோயில் உள்ளே நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் இசை புதிய அனுபவமாக இருந்தது.
சிவனின் கருவறைக்கு மிக அருகிலும் கங்கையின் கரையிலுமாக இளையராஜா மிக உணர்ச்சிகரமாகப் பாடி மகிழ்ந் தார். பக்தர்கள் தன்னை மறந்துஇளையராஜாவின் இசையில் பரவசம் அடைந்தனர்.
மேடையில் பக்தியில் திளைத்த இளையராஜா, சிவனை வணங்கியபடி கச்சேரியை தொடங்கினார். மேடை எதுவும் அமைக்காமல் கோயிலின் அமைப்பு மாறாமல் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா விரும்பியிருந்தார். இதனால் கம்பள விரிப்பு மட்டும் தரையில் விரிக்கப்பட்டிருந்தது.
மேடையின் பின்பிறமும், பார்வையாளர்களுக்காக 3 பெரிய மின்னணு திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தொடக்கத்தில் இளையராஜா பற்றியசிறிய குறிப்புகள் ஒலியுடன் மின்னின. இதில் முதலாவதாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு மேடையில் இளையராஜா பற்றி கூறிய வாசகங்கள் ஒலித்தன. அதேசமயத்தில் ரஜினியுடன் இளையராஜா இருக்கும் கருப்பு-வெள்ளை புகைப்படம் திரையில்காட்டப்பட்டது. தொடர்ந்து இளையராஜாவின் வாழ்க்கை குறிப்பும், இசையில் அவரது சாதனையும் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டன.
இதில் அவர் புதிதாக பஞ்சமுகி ராகம் கண்டுபிடித்தது குறித்து திரையில் காட்டிய போது வளாகம் முழுவதும் கரவொலி எழுந்தது. டிஜிட்டல் திரையில் சிவன், திரிசூலம், காசி விஸ்வநாதர் கோயிலின் கருவறை சிவலிங்கம் உள்ளிட்டவை ஜொலித்தன. ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டின் பெயரும் அவ்வப்போது திரையில் இடம் பெற்றது. இதன் மூலம் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு சிறப்பு சேர்த்தார் இளையராஜா.
நிகழ்ச்சியின் முதல் பாடலாக தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற ‘ஜனனி… ஜனனி…’ பாடலை இளையராஜா பாடினார். இரண்டாவதாக, ‘நான் கடவுள்’படத்தின் சம்போ.. பாடல் அவரது குழுவினருடன் கம்பீரமாக ஒலித்து கோயில் வளாகத்தையும் தாண்டி அதிர வைத்தது. இப்பாடலை இளையராஜா பாடி முடித்ததும், நகரத்தார் சத்திரத்தில் இருந்து சிங்கார பூஜைக்கான ஊர்வலம் கோயிலுக்குள் வந்தது. அப்போது வந்த மேளச் சத்தம்தன்னை ஆசிர்வதித்ததுபோல் இருந்ததாக இளையராஜா பெருமிதம் தெரிவித்தார். நான் கடவுள் படத்தின் டைட்டில் பாடலான ‘மாகங்கா..’ பாடலும் பாடப்பட்டது. கமல்ஹாசனின் ‘ஹேராம்’ இந்திப் படப் பாடலான, ‘ஹேராம் ஹேராம்…’ பாடப்பட்டபோது குரல் வளமும் இசையும்புத்துணர்ச்சி அளித்தது. கமலின் மற்றொரு படமான ‘சலங்கை ஒலி’யின் ‘ஓம்நமச்சிவாயா…’ பாடலும் பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைத்தது.
வாரணாசி புகழுக்கு காரணமான சிவனை போற்றும் தன் ஆல்பத்தின் பாடல்களையும் தவறாமல் பாடினார் இளையராஜா. ஞானசம்பந்தரின் ‘உன்னாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்…’ எனும் தேவாரப் பாடலை தனது ஆல்பத்திலிருந்து பாடியது, காசி விஸ்வநாதர் கோயிலுக்குஅணிகலனாக அமைந்தது.இப்பாடல்பாடப்பட்ட சூழலையும் ஆங்கிலத்தில்விவரித்து கைதட்டலை பெற்றார் இளையராஜா. இத்துடன் வாரணாசியின் புகழுக்குசிவனுடன் சேர்ந்து வித்திடும் புனிதகங்கை, காசி விசாலாட்சி மற்றும் அன்னபூரணி மீதான பாடல்களும் பரவசப்படுத்தின. பின்னர் மகாகவி பாரதியார் பாடிய ‘உன்னையே சரணடைந்தேன்..’பாடலை பாடினார். ராமராஜன் படத்தின் ‘சொர்க்கமே என்றாலும்..’ பாடலின் சரணத்தில் தனது சொந்த வரிகளை சேர்த்து இளையராஜா பாடினார். இதில் இந்தியாவே சிறந்தது எனவும் தேச ஒருமைப்பாட்டை விளக்கும் கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. மென்பொருள் துறையில் இந்தியா முதன்மை வகிப்பதையும் இங்கிலாந்தின் பிரதமராக இந்தியர் ஒருவர் பதவி வகிப்பதையும் இந்த சரணத்தில் இளையராஜா பாடினார்.
திருவள்ளுவர், கம்பன், கபீர், மீராமற்றும் பாரதியும் வாழ்ந்தது நம் நாடுஎன்பதையும் ராகமாகப் பாடினார். சொர்க்கமே பாடலின் தேச ஒருமைப்பாட்டு கருத்தை வலியுறுத்தும் வகையில்நமது பிரதமர் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நடத்துவதாக அவர் பாராட்டியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.
தமிழில் 9 பாடல்கள் மட்டுமின்றி தேசிய ஒருமைப்பாட்டை காட்டும் வகையில் இந்தி (2), தெலுங்கு (2), கன்னடம் (1), மலையாளம் (1), சம்ஸ்கிருதம் (3) ஆகிய பிற மொழிகளில் 9 பாடல்கள் என மொத்தம் 18 பாடல்களை இளையராஜா தன் கச்சேரியில் பாடினார். இதன்மூலம், காசி விஸ்வநாதர் கோயிலில் முதன்முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் பாடல்கள் பாடி இளையராஜா வரலாற்று சாதனை புரிந்து விட்டார்.
இளமைக் காலங்கள் படப்பாடலான, ‘ராகவனேரமணா…’ உள்ளிட்டவற்று டன் ஸ்ரீராமரின் புகழையும் தனது பாடல்களில் இளையராஜா பாடத் தவறவில்லை.
இளையராஜாவின் இசையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடைசி வரை இருந்து ரசித்தார்.
பக்தியிசை நிகழ்ச்சியில் மொத்தம் 7 பாடகர்கள் இடம் பெற்றிருந்தனர். இதன் ஒலி அமைப்பாளராக ஷியாம் பாலகிருஷ்ணன், உதவியாக எட்வின் இருந்தனர். நிகழ்ச்சிக்கான அமைப்பை ஜேடிஎச் ஈவண்ட் கியர்ஸ் நிறுவனத்தின் ஜான்சன் செய்திருந்தார்.
இளையராஜாவின் முக்கிய இசைக் கலைஞர்களில் புல்லாங்குழல் நெப்போலியன், கீபோர்டு பரணிதரன் மற்றும் ரஞ்சன், வயலின் பிரபாகர், பேஸ் கிடார் சுரேஷ், தபேலா கிரண் மற்றும் நாகி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.