ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா(65). இவரது மைத்துனர் மகன் அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்கிற அனுஜ் சர்மா. ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்தவர். இவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 11ம் தேதியில் இருந்து பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்த்த போது தாஸ் ஒரு பெரிய சூட்கேசுடன் வீட்டை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
இதையடுத்து தாசை போலீசார் கைது செய்து விசாரித்த போது தனது பெரியம்மாவின் தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட சரோஜ் சர்மா தனது தந்தையின் மூத்த சகோதரரின் மனைவி என்றும், 1995ம் ஆண்டு அவரது கணவர் இறந்த பிறகு தங்களுடன் வசித்து வந்ததாகவும் தாஸ் தெரிவித்தார். தாசின் தாயார் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தாசின் தந்தை டிச.11 அன்று இந்தூருக்கு சென்ற போது இந்த கொலை நடந்துள்ளது. சுத்தியலால் பெரியம்மாவின் தலையில் தாக்கிய தாஸ் அவரை சமையல் அறையில் வைத்து கொன்று விட்டு உடலை குளியலறைக்கு இழுத்துச் சென்று மார்பிள் கட்டர் மூலம் 10 துண்டாக வெட்டி, ஒரு பெரிய சூட்கேஸில் எடுத்து டெல்லிக்கு சென்று பல்வேறு பகுதியில் வீசியுள்ளார். தாசை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.