சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவதா அல்லது ரொக்கமாக வழங்குவதா என்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச. 19) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு, பரிசுத் தொகுப்பு, ரொக்கம் என மூன்றும் வழங்கப்பட்டன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆண்டு ரொக்கம் வழங்குவதற்குப் பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
எனினும், உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல், அவசரகதியில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. பல இடங்களில் 21 பொருட்களுக்குப் பதிலாக 15 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், முழு கரும்பு வழங்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
மேலும், வெல்லம் தரமாக இல்லை என்றும், பொருட்களில் கலப்படும் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகையின்போது, இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்க்கும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியான குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 2.10 கோடி. ஒருவேளை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, ரொக்கம் வழங்குவதாக இருந்தால், அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை முன்கூட்டியே பெற்று, அதை கணினியில் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே குடும்ப அட்டை விவரங்களுடன் ஆதார் எண் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ரொக்கத்தை செலுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. எனினும், சுமார் 13 லட்சம் பேர் ஆதாருடன் வங்கிக் கணக்கை சேர்க்காமல் உள்ளனர். அவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதா அல்லது ரொக்கமாக கையில் வழங்கலாமா என்று ஆலோசிக்கப்படுகிறது. மேலும், கடந்த முறை போல தவறு ஏதும் நேர்ந்துவிடாமல் கண்காணித்து, மீண்டும் பரிசுத் தொகுப்பாகவே வழங்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. பயனாளிகள் செல்போன் சேவையைப் பயன்படுத்தும்போது, அதன் பேமென்ட் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைத்திருந்தாலோ அல்லது அஞ்சலக வங்கிக் கணக்கில் சேர்ந்து இருந்தாலோ, ஆதார் அடிப்படையில் வழங்கப்படும் மானியம் மற்றும் நலத் திட்டங்கள், கடைசியாக ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கே செல்லும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலும் அரசின் கவனத்துக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, பொங்கல் பரிசு தொடர்பான பணிகள் மும்முரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.