நேற்று சென்னை போக்குவரத்து காவலர் பிரிவில் பணி புரியும் ஆண் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தொடங்கி வைத்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்ததாவது:- “தற்போது போக்குவரத்து போலீசார் எட்டு மணி நேரம் நின்று பணி செய்யும் நிலை உருவாகி உள்ளது. ஒருவர் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக பாதிக்கப்படுகிறார்.
இதனால் போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை நடத்துவது அவசியமானது ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். அந்தவகையில், போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.
இதனால் அனைவரும் முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அட்டை, இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த முகாம்களில் ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த மருத்துவ முகாம்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். அதன் மூலம், அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெறலாம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல் மற்றும் கண் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து இந்த முகாமில் சுமார் 250 போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.