ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவரின் மனைவி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “திருமணத்துக்குப் பிறகு நானும் என் கணவர் சரணும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டுமுதல் எங்களுக்குள் பிரச்னை வர ஆரம்பித்தது. அடிக்கடி வரதட்சனை பணம் கேட்டும், ஆண் குழந்தை வேண்டும் எனவும் அடித்து துன்புறுத்துவார். இதற்கிடையில் நான் கர்ப்பமானேன்.
ஆனால், என் கணவருக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். அதற்கு தகுந்த காரணத்தை தேடியவர் சமீபத்தில் எனது ஆரோக்கியத்துக்காக ஊசி போடவேண்டும் என அழைத்துச் சென்று ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை எனக்கு செலுத்தியிருக்கிறார்.

எனக்கு உடல்நலப் பரிசோதனை நடந்தபோதுதான் எனக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. எனக்கு வேண்டுமென்றே ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்தி, எனக்கும் என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவுசெய்து சரணைக் கைதுசெய்து விசாரித்துவருகிறது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.