மன்னார்குடி அருகே புண்ணியக்குடி-பாமணி சாலை; ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் மழை நீர்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலப்பாலம்  அருகே புண்ணியக்குடி – பாமணி  சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இந்த சுரங்க பாதையை உள்ளூர் வட்டம், பாமணி, தெற்கு மற்றும் வடக்கு உடையார் மானியம், தென்கார வயல் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,  அவ்வப்போது பெய்யும்  கனமழை காரணமாக இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் புகுந்து வெளியேற வழியில்லாமல் மார்பளவு  தேங்கியுள்ளது.  

இதுபோன்ற சமயங்களில் மழை நீரை அகற்ற ரயில்வே துறை சார்பில் அந்த சுரங்கப்பாதை அருகில்  மோட்டார்  வசதி செய்திருந்தும் கடந்த எட்டு மாத காலமாக அந்த மோட்டார் பழுதடைந்து இயங்கவில்லை. இதன் காரணமாக பத்திற்கும்  மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி மன்னார்குடிக்கு போக வேண்டிய அவல நிலை உள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பலமுறை  கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

எனவே, ரயில்வே நிர்வாகம் தற்காலிக ஏற்பாடாக ராட்சத மோட்டார்  மூலம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.  இந்த  பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும்  வகையில் சுரங்கப் பாதைக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு  ஊர்களில் போடப் பட்டுள்ளதை  போல் இரும்பு சீட்டு கொண்டு செட் அமைத்து  தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.