மாநகராட்சி, நகராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவு: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது

வேலூர்: தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடித்துத்தள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சமையல் கூடங்கள், நூலக கட்டிடங்கள், கழிவறை வளாகங்கள், அலுவலக கட்டிடங்கள், மேல்நிலைநீர் தேக்கத்தொட்டிகள் ஆகியன காலங்கடந்த நிலையிலோ அல்லது பல்வேறு சூழ்நிலைகளிலோ பழுதடைந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளன. இவற்றை இடிப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி, ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் 20 ஆண்டுகளுக்குள் உள்ள பழுதடைந்த நிலையிலான  கட்டிடம் மாநகராட்சிகளாக இருந்தால் மாநகராட்சி தலைமை பொறியாளரும், நகராட்சிகளாக இருந்தால் நகராட்சி நிர்வாக இயக்குனரக தலைமை பொறியாளர் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு மாநகராட்சிகளுக்கு மாநகராட்சி கமிஷனரும், நகராட்சிகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரும் இறுதி உத்தரவு வழங்குவர்.

ரூ.5 லட்சம் வரை மதிப்புடைய 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்கள் மாநகராட்சிகளாக இருந்தால் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆய்வு செய்து அதன் மீது மாநகராட்சி கமிஷனரும், நகராட்சிகளாக இருந்தால் மண்டல செயற்பொறியாளரும் ஆய்வு செய்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரும் இறுதி உத்தரவு வழங்குவர்.

கட்டிடம் இடிக்கும் நிலையில் அப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் கட்டிடங்களின் அருகில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அக்கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று வழி காட்டி நெறிமுறைகளைதமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.