சென்னை: பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவைகண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்குவெளியே செய்தியாளர் சந்திப்பில் பேசியபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல்பூட்டோ, குஜராத் கலவரத்தோடு பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, பிலாவல் பூட்டோவை கண்டித்து இந்தியா முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்திலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக இளைஞர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், இளைஞர் அணி தலைவர் சூர்யா ரமேஷ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிலாவல் போன்று முகமூடி அணிந்த நபரைகையில் சங்கிலியால் விலங்கிட்டு அழைத்துவந்து, அவரது முகமூடியில் அடித்து எதிர்ப்புதெரிவித்தனர். பிலாவலின் புகைப்படங்களை கிழித்து தீயிட்டு கொளுத்தினர். அவர்உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கரு.நாகராஜன் கூறியபோது, ‘வங்கதேசத்தில் தோல்வியுற்ற 93 ஆயிரம் பாகிஸ்தானிய வீரர்கள் மண்டியிட்டதை மறந்துவிட்டு தற்போது இந்திய பிரதமரை பாகிஸ்தான் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. பாகிஸ்தான் அமைச்சரை கண்டித்து மாநில தலைவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது’’ என்றார்.