ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் புங்ரா என்ற கிராமத்தில் கடந்த 8-ம் தேதி சுரேந்தர்சிங் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது உணவு தயாரிக்கும் இடத்தில் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து வீடு தீப்பற்றியது. வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எனினும் அடுத்தடுத்த உயிரிழப்பு காரணமாக, இறந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இது நேற்று முன்தினம் 32 ஆக அதிகரித்தது. இதுகுறித்து பாஜக.வைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கூறும்போது, “விபத்து நிகழ்ந்த கிராமத்துக்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் இதுவரை செல்லவில்லை.
ராகுல் காந்தி நடைபயண 100 நாள் கொண்டாட்டத்தில் அவரது கட்சி உள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பது ஆகும். அரசோ அல்லது காஸ் நிறுவனமோ இதுவரை இழப்பீடு அறிவிக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.