சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் மானவாரி எனப்படும் பருவமழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. அதன்படி திருவாடனை, ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட 11 யூனியன்களில் நெல் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக மிளகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சுமார் 50 ஆயிரம் ஏக்கரிலும், சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய்வித்துகள் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து செப்டம்பர் மாதம் உழவார பணிகளை செய்தனர். ஆனால் அக்டோபர் மாதத்தில் தான் வடகிழக்கு பருவமழை துவங்கியது.
இதற்கிடையில் வைகை அணை உபரிநீர் வெளியேற்றம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் முறையான வரத்து கால்வாய் வசதியின்றி அனைத்து பகுதிக்கும் முறையாக தண்ணீர் வந்தடையவில்லை. இதனால் 30 சதவீத கண்மாய்கள் பெருகவில்லை. வயல்காடுகளில் கிடந்த மழைத் தண்ணீரை பயன்படுத்தி களை எடுத்தல், நாற்று நடுதல், உரமிடுதல் போன்ற விவசாய பணிகளுக்கு கடன் வாங்கி விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.
பெரும்பாலான இடங்களில் நன்றாக வளர்ந்த நிலையிலும், சில இடங்களில் பயிர்கள் கதிர் விட்ட நிலையிலும் உள்ளது. ஆனால் தற்போது மழை இல்லை, பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீரும் இல்லை. இதனால் பயிர்கள் கருகி வருகின்றன.
இந்த பயிர்கள் தற்போது ஆடு, மாடுகளுக்கு தீவனமாக மாறியுள்ளன. விளைநிலங்கள் மேய்ச்சல் நிலமாக மாறி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.