கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து, தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். சர்வரை விடுவிக்கவேண்டுமானால் கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கொடுக்க வேண்டும் என்றும் ஹேக்கர்கள் டிமாண்ட் செய்திருந்தனர். அதையடுத்து, தீவிர நடவடிக்கைகளுக்குப் பின்னர் சர்வர் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில், மீண்டும் டெல்லி எய்ம்ஸ்-ன் 5 இணைய சர்வர்கள் முடக்கப்பட்டு, தற்போது மீட்கப்பட்டிருக்கின்றன. அண்மையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 5 இணைய சர்வர்கள் சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரப்பில், “டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை சீனர்கள் ஹக் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தற்போது 5 physical சர்வர்கள் மீட்கப்பட்டு, அவற்றிலிருந்து தரவுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. இந்த ஹேக்கிங்கால் சர்வர்கள் முடங்கிவிட்டன. ஆனால், தற்போது சர்வர்கள் மீட்கப்பட்டிருப்பதால் வெளி நோயாளிகளின் பதிவு, சேர்க்கை நடைமுறைகள் இ-ஹாஸ்பிடல் மூலம் இணைய முறைக்குக் கொண்டுவரப்பட்டன. 5 சர்வர்கள் மீட்கப்பட்டிருப்பதன் மூலம் மிக மோசமான இழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) ஐந்து சர்வர்கள் சமீபத்திய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு வியாழக்கிழமை மாநிலங்களவையில் தகவல் தெரிவித்து உறுதி செய்திருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி ஜான் பிரிட்டாஸ், “எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் ரேன்சம்வேர் மூலம் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றனவா?” என மத்திய அரசிடம் கேள்வியெழுப்பினார். அவரின் கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “எய்ம்ஸ்-ல் சைபர் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. மேலும், இந்தச் சம்பவத்தை கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மதிப்பீடு செய்திருக்கிறது” என மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
இந்த பாதிப்பு குறித்துப் பேசிய அமைச்சர், “எய்ம்ஸின் ஐந்து சர்வர்கள் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், சுமார் 1.3 டெராபைட் தரவுகள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இ-மருத்துவமனைக்கான அனைத்து தரவுகளும் ஒரு காப்பு சேவையகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் பாதிக்கப்படாமல் புதிய சர்வர்களில் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நோயாளிகளின் அட்மிஷன், டிஸ்சார்ஜ் உள்ளிட்ட பதிவுசெய்யப்பட்ட தரவுகள் குறிவைக்கப்பட்டிருந்தன. இவை சைபர் தாக்குதலுக்குள்ளான இரண்டு வாரங்களில் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து, சைபர் தாக்குதல்கள் மற்றும் இணையப் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான `இணையவழி நெருக்கடி மேலாண்மை திட்டம்’ கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டீ) மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுகாதாரத்துறை நிறுவனங்களின் இத்தகைய பின்னடைவை மேம்படுத்தத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.