“அண்ணாமலை வாட்ச் பிரச்னை தேவையற்றது; மக்கள் பிரச்னைகள் ஆயிரம் இருக்கின்றன!" – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அசோக் நகர்ப் பகுதியில் திறந்தவெளி உடற்பயிற்சி மையத்தைத் திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கோவை மாநகர் முழுவதும் உள்ள சாலைகளின் நிலையை, எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் எந்த மாற்றமும் இல்லை. என் தொகுதியில்கூட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

வானதி சீனிவாசன்

இவர்கள் போடும் சாலை ஒரு மழைக்குக்கூட தாங்குவதில்லை. பொறுப்பு அமைச்சர் இங்கு வரும்போதெல்லாம், வாய் வார்த்தைக்காக சாலை போடுகிறோம் என்று கூறுகிறார். ஆனால் நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதைக் கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தவிருக்கிறது.

கோவையில் குடிநீர், சாலை, குப்பை எடுப்பது என்று எல்லாமே பிரச்னையாக இருக்கிறது. இப்போதும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த முறையில்தான் வைத்திருக்கின்றனர். அரசாங்கம் ஏழை தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறது. கோவை மாநகராட்சி கொழுசில் மயங்கிவிட்டது. இங்கு எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை.

கோவை

முதல்வர் தன் வாரிசை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தி.மு.க ஒருகாலத்தில் சாதாரண மக்களுக்கான கட்சியாக இருந்து, இன்று அது ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது.

குடும்பத்துக்கான ஆட்சியாக மாறிவிட்ட பிறகு, அது தங்கள் சுயநலத்துக்காக, லஞ்ச ஊழல் புகாரில் மாட்டியிருப்பதை கடந்த காலங்களில் இந்த நாடு பார்த்திருக்கிறது. தி.மு.க ஒருகாலத்தில் அதிக இளைஞர்களை ஈர்த்த கட்சி. இன்று அந்தக் கட்சியில் இளைஞர்கள் என்றாலே முதல்வரின் மகன், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் வாரிசுகள்தான் இருக்கின்றனர்.

உதயநிதி

புதியவர்களுக்கு, திறமைசாலிகளுக்கு அங்கு வாய்ப்பு இல்லை. அமைச்சரவை, நிர்வாகிகள் கூட்டத்தைக்கூட குடும்பத்தின் வரவேற்பறையில் நடத்துகின்றனர். எங்கள் கட்சியில் தலைமைப் பொறுப்பே குறுகிய காலத்துக்கு மட்டும்தான். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஜனநாயகரீதியாக மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

எங்களுடைய அமைச்சர்களின் வாரிசுகளும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர். அதிகாரம் ஒரு குடும்பத்திடம் இல்லை. அதிகாரம் முழுவதுமே ஒரு குடும்பத்திடம் இருப்பதுதான் குடும்ப அரசியல். அதுதான் தி.மு.க-வில் நடக்கிறது. மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, குடும்ப அரசியல் பாதகத்தை ஏற்படுத்தும். அண்ணாமலை சட்டை, பேன்ட், வாட்ச் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை.

அண்ணாமலை

தமிழ்நாட்டில் பேச மக்கள் பிரச்னைகள் ஆயிரம் இருக்கின்றன. கடந்த காலங்களில் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு தி.மு.க என்ன கருத்து கூறியதோ, அதையே தான் இன்று மற்ற கட்சிகள் சொல்கின்றன. தி.மு.க போடும் இரட்டை வேடம் இன்று மக்கள் முன்பு அம்பலமாகிவிட்டது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.