அலகுமலை ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு: 6 வாரங்களில் பரிசீலிக்க திருப்பூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி அளித்துள்ள விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி தாக்கல் செய்த மனுவில், “அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் எதுவும் இல்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் உள்ள பல ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்றப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு அரசாணையின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும். அலகுமலை அவ்வாறு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அறிவிக்கப்படவில்லை.

ஜல்லிக்கட்டு நடத்தும்போது உணவகங்கள் அமைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதார கேடு ஏற்படுகிறது. கிராம மக்களுக்கு எந்த பயனும் தராத இந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.