புதுடில்லி,:’சட்டம் என்பது மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதாகும். ஆனால், துன்புறுத்துவதற்காக சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மருந்துகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலையில், ௨௦௧௩ல் மருந்துகள் கண்காணிப்பு அதிகாரி சோதனை மேற்கொண்டார். இது தொடர்பாக, ௨௦௧௬ல் விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், ௨௦௧௭ல் தான் புகார் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கால தாமதமாவதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொழிற்சாலை உரிமையாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ஆர்.பட் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டங்கள் என்பது மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இருக்க வேண்டும். ஆனால், துன்புறுத்தும் வகையில் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி போலி வழக்குகள் தொடருவதை நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது.
இந்த குறிப்பிட்ட வழக்கில் புகார் பதிவு செய்வதற்கே நான்கு ஆண்டுகளாகியுள்ளது. அதுவும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் தொழிற்சாலை உரிமையாளர் மீதான புகார், வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement