எல்லையில் போர் விமானங்களை நிறுத்தி.. மிரட்டல் நாடகம்! . பழைய யுத்தியை கையிலெடுத்தது சீனா| Dinamalar

புதுடில்லி, அருணாச்சல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநில எல்லையில் உள்ள திபெத்தில், சீன ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ‘ட்ரோன்’களை நிலைநிறுத்தி வைத்து மீண்டும் மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ளது. கடந்த ௨௦௨௦ல் கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டன.

இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. பல சுற்று பேச்சுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. அதே நேரத்தில் மேலும் சில இடங்களில் படைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்குள் நுழைவதற்கு சீன ராணுவம் சமீபத்தில் முயன்றது. இதை நம் வீரர்கள் முறியடித்தனர். அப்போது நடந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்கள் எல்லையில், நம் விமானப் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது நம் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்கள் எல்லையை ஒட்டியுள்ள தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் விமானப் படை தளங்களில் சீனா தன் போர் விமானங்களையும், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் அதிகளவில் போர் விமானங்களும், ட்ரோன்களும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ௨௦௨௦ல் லடாக்கில் அத்துமீறி நுழைய முயன்ற முயற்சியில் சீனா தோல்வியடைந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுக்கும் வகையில் எல்லையில் தன் படைகளை சீனா நிறுத்தியது. போர் விமானங்கள் என மிகப் பெரும் படையை நிறுத்தியது.

இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல், நம் ராணுவமும் தன் படைகளை எல்லையில் நிறுத்தியது. விமானப் படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. நம் எல்லையில், போர் விமானங்கள், பீரங்கிகள் என, பெருமளவில் ராணுவத் தளவாடங்கள் நிறுத்தப்பட்டன.

தற்போதும் அதுபோலவே, நம் நாட்டுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தன் போர் விமானங்களை சீனா நிறுத்தி வைத்துள்ளதாக, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

திசை திருப்ப முயற்சி

கடந்த ௨௦௨௦ல் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானது. மேலும், உலகெங்கும் பரவியது. இதையடுத்து சீனா மீது உலக நாடுகள் பலவும் குற்றஞ்சாட்டின. இதை திசை திருப்பும் வகையிலே, இந்தியாவுடனான எல்லை பிரச்னையை சீனா கையில் எடுத்தது.

தற்போதும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. அரசின் கட்டுப்பாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்தே, மீண்டும் ஆக்கிரமிப்பு நாடகத்தில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் எதையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக நம் ராணுவம் கூறியுள்ளது.

சீனாவுக்கு எச்சரிக்கை

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள ௧௭ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்த மடத்தின் தலைவர் லாமா யேஷி காவோ கூறியுள்ளதாவது:மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது; இது முறையல்ல. உலக அமைதியை விரும்பினால், தன் ஆக்கிரமிப்பு கொள்கையில் இருந்து சீனா வெளியே வர வேண்டும்.கடந்த ௧௯௬௨ல் இந்தியா – சீனா இடையே போர் நடந்தது. அப்போது சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. ஆனால், இது, ௨௦௨௨ம் ஆண்டு; இங்கு பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். அவரிடம் வாலாட்ட முடியாது. நம் எல்லைக்குள் நுழைய முயன்றால், யாராக இருந்தாலும் அவர் விட மாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.